மத வெறி வளர்ந்தால், அது தேசத்தின் வாழ்க்கையையே அழித்து, மனித உறவுகளை சீர்குலைக்கும்... சந்திரசேகர் ராவ்

 
கே.சந்திரசேகர் ராவ்

மத வெறி வளர்ந்தால், அது தேசத்தின் வாழ்க்கையையே அழித்து, மனித உறவுகளை சீர்குலைக்கும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் ஹைதராபாத் மாநிலம் 1948 செப்டம்பர் 17ம் தேதியன்று இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் 17ம் தேதியை தேசிய ஒருங்கிணைப்பு தினமாக அனுசரிக்க தெலங்கானா அரசு கடந்த 3ம் தேதி முடிவு செய்தது. இதனையடுத்து நேற்று தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அம்மாநில அரசு தேசிய ஒருங்கிணைப்பு தினம் விழாவை கொண்டாடியது.

கொடி ஏற்றி மரியாதை செலுத்திய கே.சி.ஆர்.

ஹைதராபாத்தில் தெலங்கானா ஜாதிய சமிக்யதா தினோத்சவம் (தெலுங்கானா தேசிய ஒருமைப்பாடு தினம்) தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கே.சந்திரசேகர் ராவ் பேசுகையில் கூறியதாவது: மத வெறி வளர்ந்தால், அது தேசத்தின் வாழ்க்கையையே அழித்து, மனித உறவுகளை சீர்குலைக்கும். தங்களின் குறுகிய நலன்களுக்காக சமூக உறவுகளில் முட்களை விதைக்கிறார்கள்.

அமித் ஷா

தங்கள் விஷமத்தனமான கருத்துக்களால் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புகிறார்கள். மக்களிடையே இப்படிப்பட்ட பிரிவினை எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தற்கு மத்தியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.