கொஞ்சமாக மது அருந்தியவர்களை கைது செய்யக்கூடாது.. பீகார் அரசுக்கு கோரிக்கை வைத்த ஜிதன் ராம் மாஞ்சி

 
மது அருந்துபவர்கள்

பீகாரில் கொஞ்சமாக மது அருந்தியவர்களை கைது செய்யக்கூடாது என்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசாங்கத்திடம் ஜிதன் ராம் மாஞ்சி கோரிக்கை வைத்துள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மகா கூட்டணியின் கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அங்கு மது கடத்தல் மற்றும் கள்ள மது விற்பனை மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மதுவிலக்கை கண்டிப்பாக அமல்படுத்த மாநில அரசு தனது யுக்தியை மீண்டும் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, மது அருந்துபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

மது விலக்கு

டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஜிதன் ராம் மாஞ்சி பேசுகையில் கூறியதாவது: மதுவிலக்கு நல்ல விஷயம்தான் ஆனால் பீகாரில் அதை அமல்படுத்துவதில்தான் பிரச்சினை இருக்கிறது. இதில் பல குறைபாடுகள் உள்ளதால், மது கடத்துபவர்கள் கைது செய்யப்படாமல், ஒரு குவார்ட்டர் மது மட்டுமே உட்கொள்ளும் ஏழை மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். 

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்…. குடியரசு தலைவருக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம்

இன்று, மது அருந்திய குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் ஒரு குவார்ட்டர் மதுவை மட்டுமே உட்கொண்டுள்ளனர். சிறிய அளவில் மது அருந்தியவர்களை கைது செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜிதன் ராம் மாஞ்சி பீகாரில் மதுவிலக்கை எப்பொழுதும் விமர்சித்து வந்ததோடு, சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.