எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்.. காங்கிரஸ் தகவல்

 
நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுதான் இறுதி முடிவு எடுக்கும். இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிசியாக இருப்பதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது. 

நாடாளுமன்றம்

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை புறக்கணிக்க மாட்டார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களில் 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி நிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.  எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான தற்போதுள்ள இடஒதுக்கீட்டை இடையூறு செய்யாமல், அனைத்து சமூகங்களிலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரிக்கிறது. 

ஜெய்ராம் ரமேஷ்

முக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை என்றால், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அடிப்படை எங்கே. இடஒதுக்கீடு செய்ய வேண்டிய தகவல் அடிப்படையை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி கடந்த  செப்டம்பர் 7ம் தேதியன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை  நடைபயணத்தை தொடங்கினார். இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.