வெறுப்பு நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது... ஜெகதானந்த் சிங் பேச்சால் சர்ச்சை

 
ஜெகதானந்த் சிங்

வெறுப்பு நிலத்தில் ராமர்  கோயில் கட்டப்படுகிறது, ராமரை மக்களின் இதயத்திலிருந்து பறித்து அற்புதமான அரண்மையில் சிறை வைக்க முடியாது என்று  என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவைர் ஜெகதானந்த் சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில தினங்களுக்கு முன்,  அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர்  கோயில் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து, 2024 ஜனவரி 1ம் தேதி மக்களின் தரிசனத்துக்காக ராமர் கோயில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் ராமர் கோயில் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவைர் ஜெகதானந்த் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஜெகதானந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெறுப்பு நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. பிரம்மாண்டமான அரண்மையில் பகவான் ராமரை அடைத்து வைக்க முடியாது. 

அமித் ஷா

நாங்கள் ஹே ராம் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஜெய் ஸ்ரீராம் மீது அல்ல. ஸ்ரீராமர் அயோத்தியிலோ அல்லது இலங்கையிலோ இல்லை. ஆனால் ஸ்ரீராமர் ஷபரியின் குடிசையில் இருக்கிறார். ராமாயணத்திலிருந்து ராமர் ஓடிவிடுவாரா? இந்தியா இப்போது ராமருக்கு சொந்தமில்லையா? இப்போது ராமர் கோயிலுக்கு மட்டும் சொந்தமா?. இந்தியாவில் ராமர் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. நீங்கள் ராமரை மக்களின் இதயத்திலிருந்து பறித்து அற்புதமான அரண்மையில் சிறை வைக்க முடியாது, நீங்கள் ராமரை சிக்க வைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஷெஹ்சாத் பூனவல்லா

ராமர் கோயில் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தற்காக ஜெகதானந்த் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத்  பூனவல்லா கூறுகையில், இது இணை நிகழ்வு அல்ல, வாக்கு வங்கிகளின் பயன்பாடு. பி.எஃப்.ஐ. தடை செய்யப்பட்டபோது, அந்த நேரத்திலும், அவர் இந்துக்களை அவமதித்து அவமானப்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.