குஜராத் தேர்தல் - ஒரே தொகுதியில் ஜடேஜாவின் மனைவி, சகோதரி போட்டி ?

 
jadeja

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஜடேஜாவின் மனைவி மற்றும் சகோதரி இருவரும் ஜாம் நகர் தொகுதியில் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் மாநில சட்டப் பேரவையின்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதாவது  வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது. குஜராத் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Jadeja


 
இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், அவரது சகோதரியும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார் . ராஜ்கோட்டில் வசிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான அவர் தற்போது வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட ஜாம்நகர் தொகுதியை எதிர்பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா அதே ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அவர் தற்போது மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவராக உள்ளார்.  தற்போது ஜாம் நகர் எம்.எல்.ஏவாக பாஜகவை சேர்ந்த தர்மேந்திர சிங் இருந்துவரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த வாய்ப்பு ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவிற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜாம்நகரில் ரிவபா களமிறக்கப்பட்டால் அவருக்கு எதிராக நைனாவை களமிறக்க காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது.