டெல்லிக்கு என்ன விஷயமா போனீங்க?... உள்ளாடைகள் வாங்க போனேன்.. ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பதில்

 
பசந்த் சோரன்

என்னிடம் உள்ளாடைகள் காலியாகி விட்டதால், டெல்லிக்கு உள்ளாடைகள் வாங்க போனேன் என்று செய்தியாளர்களிடம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜே.எம்.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார்.  முதல்வர் அதிகாரத்தை  பயன்படுத்தி அவர் தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக  பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.  இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  தேர்தல் ஆணையம், அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும்,   ஜார்க்கண்ட்  கவர்னருக்கு,  தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை  அனுப்பி வைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. 

ஹேமந்த் சோரன் அரசு ஊழலில் சிக்கியுள்ளது, வளர்ச்சி பணிகளில் பின்தங்கி உள்ளது.. நட்டா குற்றச்சாட்டு

இதனால் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என பரபரப்பு எழுந்தது. மேலும், இந்த நெருக்கடியை பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சியை கவிழ்த்து விடும் என்ற பயம் ஹேமந்த் சோரனுக்கு வந்தது. இதனையடுத்து கூட்டணியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சத்தீஸ்கருக்கு இடம் மாற்றினார். மேலும் ஹேமந்த் சோரன் அம்மாநில சட்டப்பேரவையில் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு  கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றார்.

நிஷிகாந்த் துபே

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எவ்வளவு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரரும், ஜே.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ.வுமான பசந்த் சோரன் அண்மையில் டெல்லிக்கு சென்று இருந்தார். டெல்லி பயணம் குறித்து பசந்த் சோரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்னிடம் உள்ளாடைகள் தீர்ந்து விட்டதால் அவற்றை வாங்க டெல்லி சென்றேன். அங்கிருந்து நான் அவற்றை பெறுகிறேன் என தெரிவித்தார். பசந்த் சோரனின் இந்த எதிர்பாராத பதிலால் செய்தியாளர்கள் சிறிது திகைத்தனர். பசந்த் சோரனின் பதில் குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே டிவிட்டரில், ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் தலைவரான ஷிபு சோரன், அதாவது குருஜியின் மகன், இப்போது தும்காவிலிருந்து டெல்லிக்கு உள்ளாடைகள் வாங்க வருகிறாரா? என பதிவு செய்து இருந்தார்.