கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மீள 12 ஆண்டுகள் ஆகும் - ரிசர்வ் வங்கி..

 
reserve bank

கொரோனா பரவலால் ஏற்பட்ட   பொருளாதார தாக்கத்திலிருந்து மீள இந்தியாவுக்கு 12 ஆண்டுகள்  தேவைப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பாக  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.  இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.  தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருவாய் இல்லாமல் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.  இதனால் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.   தற்போது தான் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்,  அதற்குள்ளாக கொரோனா 4வது அலை குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.  

பொருளாதார வளர்ச்சி

இந்நிலையில் கொரோனா தொற்றி பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மீள 12 ஆண்டுகள் ஆகலாம் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 52 லட்சம் கோடிக்கும் மேல் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.  கடந்த 2021-ம் ஆண்டில்  வளர்ச்சி விகிதம் -6.6 சதவிகிதம் என  பின்னடைவை சந்தித்ததை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மீள 12 ஆண்டுகள் ஆகும் - ரிசர்வ் வங்கி..

2023-ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி  வருடத்திற்கு 7.5 சதவிகிதமாக இருக்கும் என  வைத்துக் கொண்டால் கூட   2034-35-ம்  நிதியாண்டில் தான் கொரோனா காலத்தில் சந்தித்த இழப்புகளை சரிசெய்ய  முடியும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   2021 ஆம் நிதியாண்டில்  ரூ,19.1 லட்சம் கோடியும், நடப்பு ஆண்டில்   ரூ.17.1 லட்சம் கோடியாகவும், 23ல் ரூ.16.4 லட்சம் கோடியாகவும் ம் உற்பத்தி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.