இனி பாலியல் வழக்கில் சிறுமிகள் ஆஜராவது கட்டாயம் இல்லை! வழிமுறைகள் வகுத்த நீதிமன்றம்

 
g

பாலியல் வழக்குகளில் இனி சிறுமிகள் நேரில் ஆஜர் ஆவது கட்டாயம் இல்லை என்று புதுடெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.   இதற்கான வழிமுறைகளையும் அந்நீதிமன்றம் வகுத்திருக்கிறது.  பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  

 பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமின் கோரியதை அடுத்து அது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அதிரடியான சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

l

பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோருக்கான ஜாமின் மனு மீதான விசாரணையின்,   போது பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்படுகின்றார்கள்.   அப்படி ஆஜர் படுத்தப் படும்போது,   ஏற்கனவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அந்த சிறுமிகள் நடந்த சம்பவங்கள் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கும் போது மேலும் அச்சிறுமிகள் கொடுமை படுத்தப்படுகிறார்கள் .

தன்னை சீரழித்தவனை நீதிமன்றத்தில் பார்க்கும்போது அந்த சிறுமிகள் மேலும் மன வேதனை அடைகின்றார்கள்.  இது மனரீதியாகவும் , உடல் ரீதியாகவும் சிறுமிகளுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கும் .  அதனால் இது போன்ற ஜாமீன் வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி சட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

 நீதிமன்றங்களும் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றன.  அவற்றின் அடிப்படையில் தான் இந்த பிரச்சனையை கையாள வேண்டும் .  ஆனால் ஜாமின் வழக்கில் பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கட்டாயப்படுத்த கூடாது.  ஒவ்வொரு முறை விசாரணைக்கு வர வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்யக்கூடாது .  தேவைப்படும் போது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஜர்படுத்தலாம்.

 அப்படி இல்லை என்றால் சிறுமிகளின் பெற்றோர், வழக்கறிஞர்கள் ,பாதுகாவலர்கள், சட்ட உதவி ஆலோசகர்கள் வாயிலாக சிறுமிகளின் கருத்தை கேட்கலாம் .குற்றவாளிக்கு ஜாமின் வழக்குகளில் ஆட்சேபம் இருக்கிறதா என்று சிறுமிகளிடம்  நேரில் கேட்காமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருத்தை இப்படி அறிந்து கொள்ளலாம். அதே நேரம்,  குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகின்ற பட்சத்தில் அது தொடர்பான உத்தரவுகளையும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்க வேண்டும்.  நிபந்தனை ஜாமினில் எந்தெந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.  இதனால் அந்த நிபந்தனைகளை மீறும்போது பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தை நாடமுடியும் என்று உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.