இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்

 
monkeypox negative

இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஆப்ரிக்கா நாடுகளில் மட்டுமே பரவி  வந்த சிலையில், கடந்த மே மாதம் தொடங்கி ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.பாதிப்பில் 70 சதவீதம் ஐரோப்பாவிலும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது.  

monkeypox

இதேபோல் இந்தியாவிலும் 5 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் முதன் முதலாக கடந்த 14ம் தேதி  ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் இருவருக்கு அங்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தெலங்கானா மற்றும் டெல்லியிலும் தலா ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் முதல் முதலில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 35 வயது நபர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 72 மணி நேர இடைவெளியில் இருமுறை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டுமே நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.  இந்தியாவில் தற்போது வரை நான்கு பேர் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.