யோகி ஆதித்யநாத் வன்முறையான இந்து மேலாதிக்க அரசியலைப் பின்பற்றுகிறார்... இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் குற்றச்சாட்டு

 
யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத் வன்முறையான இந்து மேலாதிக்க அரசியலைப் பின்பற்றுகிறார் என்று இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக்  மாண்டவியா, ஸ்மிருதி இரானி, ஆர்.கே.சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், உலக பொருளாதார மன்றத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பதற்கு இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில்

இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், யோகி ஆதித்யநாத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றத்தை உலகப் பொருளாதார மன்றம் சட்டப்பூர்வமாக்கவில்லை. யோகி ஆதித்யநாத் இந்து தீவிரவாத துறவி. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களை யோகி ஆதித்யநாத் துஷ்பிரயோகம் செய்தார். யோகி ஆதித்யநாத் மிகவும் மோசமானவர். யோகி ஆதித்யநாத் வன்முறையான இந்து மேலாதிக்க அரசியலைப் பின்பற்றுகிறார்.பிரிவினையை விதைப்பதில் யோகி ஆதித்யநாத் பெயர்  பெற்றவர். மேலும் குற்றப் பதிவுகளை வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம் எந்த தரவுகளையும் இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் வழங்கவில்லை.

பா.ஜ.க.

இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. உத்தர பிரதேச அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தரம் பால் சிங் கூறியதாவது: உத்தர பிரதேச முதல்வர் பொய்யாக குறிவைக்கப்படுகிறார். இந்தியாவை விஸ்வகுருவாக மாற்றும் நோக்கில் உழைக்கும் ஒருவர் தவறாக குறிவைக்கப்படுகிறார். பிரதமர் மோடியின் கனவுகளை நிறைவேற்ற யோகி ஆதித்யநாத் அயராது உழைத்து வருகிறார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில், சிலர் தங்கள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக நாட்டின் அரசியல்வாதிகளை அவதூறு செய்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியை பற்றி முன்பு இதேபோன்ற போலிக் கதை நடத்தப்பட்டது. இப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிவைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.