மும்பை அட்டாக்கில் என் மனைவி, மகன்களை இழந்தேன் - தாஜ் ஓட்டல் மேலாளர் வேதனை

 
m

மும்பை அட்டாக்கில் என் மனைவி,  மகன்களை இழந்தேன் என்று வேதனை தெரிவித்திருக்கிறார் தாஜ் ஹோட்டலின் பொது மேலாளர் கரம்பிர் காங்கின்.

பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையின் பல்வேறு இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினார்கள்.  இந்த தாக்குதல்களில் 166 பேர் பரிதாபமாக  உயிரிழந்தார்கள் .   தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் . அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டு,   2012 ஆம் ஆண்டு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

a

இந்நிலையில்,   உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து நியூயார்க்கில்  நேற்று கூட்டம் நடத்தியது ஐக்கிய நாடுகள் சபை. இக்கூட்டத்தில்  மும்பை தாக்குதலின் போது தாஜ் ஹோட்டலின் பொது மேலாளராக இருந்த கரம்பிர் காங்கின் பங்கேற்றார்.

 கூட்டத்தில் அவர் பேசிய போது,    மும்பை அட்டாக்கின்போது உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   அவர் மேலும்,   எனது நாடு, எனது நகரம்,எனது ஓட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .  நான் அப்போது தாஜ் ஹோட்டலின் பொது மேலாளராக இருந்தேன் .   தாஜ் ஹோட்டலில்  10 பயங்கரவாதிகள் தாக்கியதை ஒட்டுமொத்த உலகமே அன்று பார்த்தது.   இந்த தாக்குதலில் எனது இரண்டு இளம் மகன்கள்,  மனைவி உள்பட 36 பேர் உயிரிழந்தார்கள்.  நான் அனைத்தையும் இழந்து விட்டேன் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.


 மும்பை அட்டாக் சம்பவத்திற்கு நிதி கொடுத்தவர்கள்,  தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.   அதுதான் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.  

 அவர் மேலும்,   முழுவதுமாக அழிக்கப்பட்ட தாஜ் ஓட்டலை 21 நாட்களில் திறந்தோம்.   பயங்கரவாதத்திற்கு எதிரான நீதியை பெற தேசிய அளவிலும் சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்தார்.