எனக்கு என் சிறுவயது கால சினிமா நட்சத்திரங்களை தான் தெரியும், ஷாரூக் கானை தெரியாது... அசாம் முதல்வர் ஹிமாந்தா

 
ஷாரூக்கான்

எனக்கு என் சிறுவயது காலத்து சினிமா நட்சத்திரங்களை தான் தெரியும், ஷாரூக் கானை தெரியாது என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்த பதான் திரைப்படம் இம்மாதம் 25ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ஒரு பாடலில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனை காவி நிற பிகினி அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர் இந்த படத்தை தடை செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நரேங்கி நகரில் ஒரு திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த பதான் பட விளம்பர போஸ்டர்களைபஜ்ரங் தளம் அமைப்பினர்  கிழித்து, எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பதான்

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஷாரூக்கான் யார்? அவரை பற்றியோ, பதான் படத்தை பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார். அதற்கு அடுத்த நாள், ஷாருக்கான் என்னிடம்  பேசினார், நான் அவரிடம் பதான் படத்துக்கு எந்த பிரச்சினையும் வராது என்று தெரிவித்தேன் என்று கூறினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரியாது என்று சொன்னது பெரிய அளவில் வைரலானது. மேலும் ஷாருக்கான் அவரிடம் போனில் பேசிய விஷயமும் வைரலானது. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எனக்கு என் காலத்து சினிமா நட்சத்திரங்களை தெரியும். எனக்கு ஷாரூக் கானை தெரியாது. அவர் மெசேஜ் அனுப்பி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். நான் ஷாரூக்கான். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் என தகவல் தெரிவித்தார். 

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

அப்போது எனக்கு நேரமில்லை. எனவே எனது பணிகளை முடித்த பிறகு, நாங்கள் அதிகாலை 2 மணிக்கு பேசினோம். தனது படம் வெளியாவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நான் அவரின் படத்தை பெயரை கேட்டேன். அதற்கு அவர் பதான் என்று பதிலளித்தார். அப்போது மாநிலத்தில் படம் தொடர்பாக எந்த குழப்பமும் ஏற்படாது என்று ஷாரூக்கானிடம் கூறினேன். எனக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இல்லை. என் சிறுவயது கால சினிமா நட்சத்திரங்களை மட்டுமே தெரியும். எனக்கு ஷாரூக்கானை தெரியாது. எங்கள் போன் கால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவதை பார்த்தேன். எத்தனையோ பதான்கள் வந்து செல்கின்றன. எங்களுக்கு அக்கறை கொள்ள வேண்டிய இன்னும் எரியும் பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.