ஜார்க்கண்ட் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.. முதல்வர் பேச்சால் அதிர்ச்சி

 
மரத்தில் சடலமாக தொங்கிய சிறுமி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா பகுதியைச் சேர்ந்த 14 வயது பழங்குடியின சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள மரத்தில்  சடலமாக தொங்கினார்.  இதை கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.   தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அர்மன் அன்சாரி என்கிற இளைஞர்  சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், இந்த  சம்பவத்தால்  நான் மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறேன்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   சிறுமியின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்கின்ற வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்  என தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன, எங்கே நடக்காது? இவ்வாறு சம்பவங்களை கணிக்க முடியாது என்று தெரிவித்தார். பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன என்று ஒரு முதல்வரே சர்வ சாதாரணமாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அர்ஜூன் முண்டா

பழங்குடியின சிறுமி கொலை தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், கடந்த வாரம் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்டாள், இப்போது பழங்குடியின சிறுமி மரத்தில் தூக்கிலிடப்பட்டாள். சிறுமி கர்ப்பமாக இருந்தாள் அதாவது அவளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். குற்றவாளிகள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் இதற்கு நிர்வாகமே நேரடி பொறுப்பு என்று நினைக்கிறேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகத் தெரிகிறது என தெரிவித்தார்.