ராகுல் காந்தியை வரவேற்பதில் பஞ்சாப் காங்கிரஸின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.. ஹர்சிம்ரத்

 
ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாப் மற்றும் சீக்கியர்களுக்கு துரோகம் இழைத்து, சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களை கூட அழிக்க முயன்ற காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தியை வரவேற்பதில் பஞ்சாப் காங்கிரஸின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது என்று ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி நேற்று காலை ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் அமிர்தசரஸ் விமான நிலையத்தில்  வந்து இறங்கினார். அங்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோயில் சென்று பிரார்த்தனை செய்தார். ராகுல் காந்தியின் பொற்கோயில் வருகையை சிரோமணி அகாலிதளம் விமர்சனம் செய்துள்ளது.

பொற்கோயிலில் ராகுல் காந்தி

சிரோமணி அகாலிதளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது: பஞ்சாப் மற்றும் சீக்கியர்களுக்கு துரோகம் இழைத்து, சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களை கூட அழிக்க முயன்ற காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தியை வரவேற்பதில் பஞ்சாப் காங்கிரஸின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. இதுவரை இந்த குடும்பம் மன்னிப்பு கேட்கவில்லை. நீங்கள் அவர்களை  வரவேற்கிறீர்களா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திரா காந்தி

1984ம் ஆண்டில் பொற்கோயிலில்  இருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை வெளியேற்ற புளூ ஸ்டாார் ஆப்ரேஷன் என்ற ராணுவ நடவடிக்கைக்கு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தினால் பீரங்கி டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாத்துக்குள்ளானது. அதே ஆண்டின் பிற்பகுதியில், இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் படுகொலை  செய்யப்பட்டார்.