ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரம்.. மக்களுக்கு ஆதரவாக வீட்டில் மவுனம் விரதம் இருந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்

 
ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட் மாநிலம் ஹலத்வானியில் ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் முதல்வர்  ஹரிஷ் ராவத் நேற்று தனது வீட்டில் ஒரு மணி நேரம் மவுன விரதம் இருந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், பள்ளிகள், மசூதிகள், கோயில் உள்ளிட்டவையும் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அதிகாரிகள் ஒலி பெருக்கி வாயிலாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 8ம் தேதி திட்டமிடப்பட்ட இடிப்பு (ஆக்கிரமிப்பு அகற்றம்) செயல்முறையை நிறுத்துமாறு அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதி மன்றம்

இந்நிலையில், ஹல்த்வானி மக்களுக்கு ஆதரவாக உத்தரகாண்டின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் ஒரு மணி நேரம் மவுன விரதம் இருந்தார். ஹரிஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் நீதிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். மக்களின் வீடுகளுக்கு எதுவும் நடக்காது என்று நம்புகிறோம். 

இந்த மவுன விரதத்தின் மூலம் மாநில முதல்வர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். முதல்வர் மாநிலத்தின் காவலர். எனது ஒரு மணி நேர மவுன விரதம் முதல்வருக்கு சமர்ப்பணம். உத்தரகாண்ட் ஒரு ஆன்மீக மாநிலம். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 50,000-55,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து சாலைகளில் வருவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டால் அது மிகவும் சோகமான காட்சியாக இருக்கும்.  ராகுல் காந்தி மிகவும் கடினமாக உழைக்கிறார். நடுங்கவைக்கும் குளிரில், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் சாலைகளில் இறங்கியிருக்கிறார். அவர் அன்பு மற்றும் அமைதியின் செய்தியை பரப்புகிறார். அவரது முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.