இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு பதிலாக, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்... ஹனுமான் பெனிவால்

 
நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு பதிலாக, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி தலைவர் ஹனுமான் பெனிவால் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாஹர் சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் லால்சந்த் மூட்-ஐ ஆதரித்து ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி தலைவரும், நாகூர் எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஹனுமான் பெனிவால்

ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி தலைவரும், நாகூர் எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் பிரச்சாரத்தின்போது கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லுங்கள் என்று அசோக் கெலாட்டிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ராகுல் காந்திக்கு 55 வயதாகிறது, இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு (இந்திய ஒற்றமை நடைப்பயணம்) பதிலாக, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாஹர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வர் லால் சர்மா கடந்த அக்டோபர் 9ம் தேதி காலமானார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் அந்த தொகுதியை காலியானதாக அறிவித்தது. மேலும் சர்தர்ஷாஹர் சட்டப்பேரவை தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.