கொட்டேஷன் கேட்காமல் ஷாஜகான் தாஜ்மஹால் கட்டியதால் அது அழகாகவும், நீடித்தும் இருக்கிறது.. பா.ஜ.க. அமைச்சர்

 
தாஜ்மஹால்

ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் கொட்டேஷன் கேட்காததால் அது எப்போதும் நீடித்ததாகவும், அழகாகவும் இருக்கிறது என்று கோவா அமைச்சர் கோவிந்த் கவுடே தெரிவித்தார்.

கோவா தலைநகர் பானாஜியில் கலா அகாடமி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை சீரமைக்க ரூ.49 கோடி பணி ஆணையை ஒதுக்கியதில் கலாச்சாரத் துறை சில நடைமுறைகளை புறக்கணித்தது என்று அம்மாநில சட்டப்பேரவையில் ஜி.எப்.பி. எம்.எல்.ஏ. விஜய் சர்தேசாய் குற்றம் சாட்டினார். மேலும் இந்த திட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் விஜய் சர்தேசாய் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

கோவிந்த் கவுடே

இதனையடுத்து பேசிய கோவா அமைச்சர் கோவிந்த் கவுடே இது தொடர்பாக கூறியதாவது: ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகான் கொட்டேஷன் (விலைகூறல்) கேட்காததால் அது எப்போதும் நீடித்ததாகவும், அழகாகவும் இருக்கிறது. எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் (எம்.எல்.ஏ.) நிச்சயமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்றிருக்க வேண்டும். 

விலைகூறல்

தாஜ்மஹால் கட்டுமானம் 1632ல் தொடங்கி 1653ல் முடிந்தது. ஆனால் இன்றும் அது அழகாகவும் என்றும் நிலைத்து நிற்கிறது. ஏன் அப்படி என்று நினைக்கிறீர்கள்? தாஜ்மஹாலை கட்டும்போது ஷாஜகான் கொட்டேஷன் கேட்காததால், 390 ஆண்டுகளாக அது அப்படியே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முகலாய பேரரசர் ஷாஜகானுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு இணையான கருத்தை முன்வைத்து நிர்வாகத்தின் நடவடிக்கை சரிதான் என அமைச்சர் பேசியதை அனைவரும் ரசித்தனர்.