ஜன்பத் 12ம் எண் பங்களாவில் குடியேறிய ராம் நாத் கோவிந்த்.. இதற்கு முன் அந்த பங்களாவில் இருந்தவர் யார் தெரியுமா?

 
ராம் நாத் கோவிந்த்

முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று ஜன்பத் சாலையில் உள்ள 12ம் எண் பங்களாவில் குடியேறினார். இதற்கு முன் அந்த பங்களாவில் வசித்தவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.

முன்னாள் குடியரசு தலைவர்கள் டெல்லியிலேயே தங்க அவர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படுவது மரபு. அதன்படி, டெல்லியில் ஜன்பத் சாலையில் உள்ள 12ம் எண் பங்களாவை தற்போது  குடியரசு தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய ராம் நாத் கோவிந்த் தங்குவதற்கு மத்திய அரசு ஒதுக்கியது. நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றதையடுத்து, முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று குடியரசு தலைவர் மாளிகையை காலி செய்து விட்டு  அவருக்கு ஒதுக்கப்பட்ட 12ம் எண் பங்களாவுக்கு சென்றார்.

ஜன்பத் 12ம் எண் பங்களா

ராம் நாத் கோவிந்த் தற்போது சென்றுள்ள 12ம் எண் பங்களாவில் இதற்கு முன் பிரபலமான மத்திய அமைச்சர் ஒருவர் 20 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறுயாருமல்ல, மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் தான். நாட்டின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பஸ்வான், 2020 அக்டோபர் 20ம் தேதி இறந்தார். 1989 முதல் ஜனதா தளம் முதல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வரையிலான மாறுபட்ட சித்தாங்களை கொண்ட கட்சிகளின் தலைமையிலான மத்திய அரசாங்கங்களில் அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் இருந்தார்.

ராம் விலாஸ் பஸ்வான் பங்களாவை நினைவிடமாக மாற்றுங்க.. ராஷ்டிரிய ஜனதா தளம் கோரிக்கை

லோக் ஜன்சக்தி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் அந்த பங்களாவில் வசித்து வந்தார். இதனையடுத்து அந்த பங்களாவை காலி செய்யும்படி சிராக் பஸ்வானுக்கு அரசு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சிராக் பஸ்வான் காலி செய்வதில் தாமதம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிராக் பஸ்வானை நிர்வாகம் அதிரடியாக காலி செய்ய வைத்தது. அதன் பிறகு அந்த பங்களாவில் மறுசீரமைப்பு பணிகள்  முழுவேகத்தில் நடைபெற்றது. தற்போது அந்த பங்களாவில் முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் குடிபுகுந்துள்ளார்.