குஜராத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு .. பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காமினி பா

 
பா.ஜ.க.வில் இணைந்த காமினி பா

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான காமினி பா  நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

குஜராத் காங்கிரஸின் தேகாம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் பெண் எம்.எல்.ஏ. காமினி பா. விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு தரும் என்ற எதிர்பார்ப்பில் காமினி பா இருந்தார். ஆனால் காங்கிரஸ் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த காமினி பா சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும், சுயேட்சையா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் பின்னர் வேட்புமனுவை திரும்ப பெற்றார்.

காங்கிரஸ்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் காமினி பா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு காமினி பா கூறியதாவது: காங்கிரஸில் ஞானம் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. எனக்கும் அதுதான் நடந்தது. ஒரு பெண்ணின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொண்டருக்கும் குரல் கொடுப்பதையும், ஒற்றுமையாக வேலை செய்வதையும் பா.ஜ.க. நம்புவதால் கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

பா.ஜ.க.

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மொத்தம்  2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சூரத் உள்பட 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.