வார்த்தை மற்றும் போராட்ட தடையை தொடர்ந்து மற்றொரு அதிரடி உத்தரவு.. நாடாளுமன்றத்தில் இதற்கும் தடை..

 
நாடாளுமன்றம்
 

வார்த்தை தடை,  போராட்ட  தடைகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில்  துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தவும் மத்திய அரச்  தடை  விதித்துள்ளது.  

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில்,  மக்களவை, மாநிலங்களவை என  இரு  அவைகளிலும்  உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலிட்டு  மத்திய அரசு ஒரு புத்தகத்தையே  நேற்று முன்தினம் வெளியிட்டது.  ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி  அவையில்  எம்.பிக்கள் பேசுவதும் வழக்கமான ஒன்றுதான்.  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில்,  ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி எம்.பிக்கள் பேசும்  அனைத்து வார்த்தைகளும் அதில்  அடங்கிவிட்டன.  இதற்கு அரசுக்கு எதிராக பேசாமல் இருக்க வேண்டும் என ஒற்றை உத்தரவு போதுமே என பொதுமக்களும், எதிர்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.  

நாடாளுமன்றம்

அதேபோல்  மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைக் கண்டித்து  அவ்வப்போது எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்ற வளாகத்தில் அவ்வப்போது போராட்டம் நடத்துவர்.   அதற்கும்  தடைவிதித்து மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நேற்று  அறிக்கை வெளியிட்டார்.  அதில், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபடுவதற்காகவும், மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கும்  நாடாளுமன்ற வளாகத்தை பயன்படுத்துவதற்கு  தடை விதிக்கப்பட்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கும்  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்திருக்கிறது.  

நாடாளுமன்றம்

அதாவது   நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பானது எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இதற்கு   கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.  கடந்த கூட்டத்தொடரின்போது   மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதோடு,  பதாகைகளை கிழித்தெறிந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.   ஆகையால் இவற்றை தடுக்கும் பொருட்டே  இந்த புதிய  தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படிகிறது.