பணமதிப்பிழப்பு நடவடிக்கை வழக்கில் சாதகமான தீர்ப்பு - நிர்மலா சீதாராமன் வரவேற்பு

 
nirmala

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வரவேற்றுள்ளார். 

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கு முன்பு, பணமதிப்பிழப்பு வழக்கில் 6 அம்சங்களை வரையறுத்து தீர்ப்பு வழங்க உள்ளோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த தீர்ப்பில், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்த பிறகே மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.  ஆகையால் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் போதாது என கூற முடியாது. ஆகையால்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை வைத்து அந்த நடவடிக்கையை தவறு என கூற முடியாது என கூறினர். 

supreme court

இந்த தீர்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: பணமதிப்பு நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே 6 மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய நடவடிக்கையைக் கொண்டுவர நியாயமான தேவை இருந்தது. மத்திய அரசில் இருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. பிரிவு 26(2) ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது. பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.