குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அடுத்த வாரம் பிரியாவிடை

 
ramnath kovindh

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில்,  அவருக்கு அடுத்த வாரம் பிரியாவிடை கொடுக்கப்படவுள்ளது. 

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இந்நிலையில், ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனை தொடர்ந்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வருகிற ஜூலை 19ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 776 எம்பிக்கள், 4033 எம்.எல்.ஏக்கள் என 4809 மக்கள் பிரதிநிகள் சேர்ந்து வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்வார்கள். பாஜக தலைமையிலான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அடுத்த வாரம் பிரியாவிடை கொடுக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள பிரியாவிடை நிகழ்ச்சியில், மக்களவை மற்றும், மாநிலங்களவை எம்.பிக்கள் ராம்நாத் கோவிந்திற்கு மரியாதை செய்கின்றனர்.