ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா - விருந்து அளித்த பிரதமர் மோடி

 
ramnath

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளதை முன்னிட்டு அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. 

நாட்டின் 14வது குடியரசு தலைவராக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இந்நிலையில், ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளை முடிவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில் நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார்.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா - 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். 
இதனையடுத்து அவர் நாளை மறுதினம் நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ளார். 


ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு விருந்து அளித்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மக்களவை கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். இதனிடையே,  அடிமட்டத்தில் இருந்து எழுந்து வந்து சாதனை படைத்தவர்கள் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி விழா புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.