உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த சோகம் - திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!

 
earth

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். 

உத்தரகாண்டில், கடந்த சில வாரங்களுக்கு முன் நில பகுதிகள் பூமியில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக ஜோஷிமாத் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு பூமிக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. இதனால் அங்குள்ள மக்களை வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்,  உத்தரகாண்டின் பிதோராகார் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் வடக்கு வடமேற்கே பகுதியில் இன்று காலை 8.58 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  நிலச்சரிவு, கட்டிட விரிசல் ஆகியவற்றுடன் நிலநடுக்கமும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.