நாய் கடித்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.. உ.பி அரசு வைத்த செக்..

 
நாய்

 
வளர்ப்பு நாய் கடித்தால், உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என  நொய்டா மாவட்ட  நிர்வாகம் அறிவித்துள்ளது

உத்தர பிரதேசம் மாநிலத்தில்   முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள நொய்டா நகரின் மேம்பாட்டு ஆணைய நிர்வாக கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது,  நொய்டா நகரில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை நொய்டா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.  இந்த செல்லப் பிராணிகள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளருக்கு ரூ.  10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும்,  இந்த தொகை, நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

நாய் கடித்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.. உ.பி அரசு வைத்த செக்..

அடுத்தாண்டு மார்ச் முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருவதாக தெரிவித்த அதிகாரிகள்,  வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறினர்.  இதை செயல்படுத்தாவிட்டால், அடுத்தாண்டு மார்ச் முதல், மாதந்தோறும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும்,  செல்லப் பிராணிகளின் கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால், அதை சுத்தம் செய்ய வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு  என்றும்,  இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.