கண்ணை மூடி திறப்பதற்குள் காணாமல் போன கட்டிடம்.. 9 நொடிகளில் தடைமட்டமான டெல்லி இரட்டை கோபுரம்..

 
 டெல்லி  இரட்டை கோபுரம் தகர்ப்பு

டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவின் இரட்டை கோபுரம் என்றழைக்கப்படும் 2 அடுக்குமாடிக் கட்டிடங்கள்  9 வினாடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் 32 அடுக்கு மாடிகளைக் கொண்ட 328 அடி உயர அபெக்ஸ் எனப்படும் கட்டிடம் அமைந்துள்ளது.  அதன் அருகிலேயே சியான் எனப்படும் 318 அடி உயரம் கொண்ட 29 மாடிக் கட்டிடம் உள்ளது.  இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் என்றழைக்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் மொத்தம் 900 வீடுகள் உள்ளன.  சூப்பர் டெக் எனும் நிறுவனம் கட்டமைத்த இந்த பிரம்மாண்ட கட்டிடம் ரூ.1,200 கோடி மதிப்பிலானது.  இதில் மூன்றில்  2 பங்கு வீடுகள் விற்பனையாகிவிட்ட நிலையில்,  இந்தக் கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு இந்த 2 உயரடுக்கு கட்டிடங்களையும்  இடிக்க உத்தரவிட்டனர். அத்துடன்   வீடுகள் வாங்கிய பொதுமக்களுக்கு 14 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்குமாறும் அறிவுறுத்தியது.  நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகும் இந்த கட்டிடங்களை இடிக்கும் பணி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.   

 டெல்லி ட்வின் டவர்

 இந்த நிலையில் இன்றைக்குள்  கண்டிப்பாக இடிக்கப்பட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது  சரியாக பிற்பகல் 2.30 மணியளவில்  இந்த இரு பிரம்மாண்ட கட்டிடங்களும் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.  கட்டிடத்தை முழுவதும் அப்படியே தரைமட்டமாக்க அதன் தூண்களில் டிரில் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று  நடைபெற்றன.  நீர்வீழ்ச்சி எனும் தொழில்நுட்பம் மூலம் ,   3,700 கிலோ சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பாயன்படுத்தப்படுத்தி இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டது. சுமார் 1000 பேர் இந்தப் பணிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.  வெடிபொருட்களை வெடிக்க செய்ததும்  9 வினாடிகளில் இந்தக் கட்டிடம் முழுமையாக இடிந்து  தரைமட்டமானது.  ஏற்கனவே  கட்டிடம்  உட்புறமாக இடிந்து  விழும் வகையிலும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

 

இந்த கட்டிடங்களை இடிக்க  மட்டுமே ரூ. 20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை. ஆனால்  சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.  இதன் மூலம் 55 ஆயிரம் டன் கட்டிட இடிபாடுகளின் குப்பை சேரும் எனவும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அந்த இடிபாடுகளை குப்பைகளாஇ  2, 3 நாட்களில் அப்புறப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   மேலும் இந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்துவரும்  7 ஆயிரம் பொதுமக்கள்  இன்று  (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணிக்கே வெளியேற்றப்பட்டுவிட்டனர்.  மாலை 5 மணிக்கே அவர்கள் மீண்டும் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்தக் கட்டிடம் இடிக்கப்பட உள்ளதை ஒட்டி பிற்பகல் 2.15 முதல் 2.45 மணி வரை நொய்டா விரைவு சாலையில் போக்குவரத்து  முழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது.   அத்துடன் கியாஸ் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் மாலை 4 மணி வரை துண்டிக்கப்பட்டன.  

9 ஆண்டு கால நீண்ட போராட்டத்தில் கட்டப்பட்ட  இந்த இரட்டை கோபுரம் கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக வெறும் 9 நொடிகளில் இடிந்து  தரைமட்டமானது. ஆனால் கட்டிடம் இடிந்த பின்னர்  அங்கு நீண்ட நேரத்திற்கு புழுதி மண்டலமாக காட்சியளித்தது.  டெல்லி முழுவதுலும்  இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கட்டிட இடிப்பை பார்த்து வியந்து போனர். இந்தியாவில்  இவ்வளவு உயரமான கட்டிடம் இடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.