அக்னிபத் வழக்குகள் மீது ஆக.25ல் விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

 
delhi hc

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மத்திய பாஜக அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற திட்டத்தை புதிதாக கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பிலும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பஞ்சாப் சட்டப்பேரவையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

supreme court

இதேபோல் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன் காரணமாக  நாட்டின் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், 
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.