எங்கள் வீட்டுப்பாடங்களை சரிபார்க்க துணைநிலை கவர்னர் எங்கள் தலைமை ஆசிரியர் அல்ல... டெல்லி கவர்னரை தாக்கிய கெஜ்ரிவால்

 
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி

எங்கள் வீட்டுப்பாடங்களை சரிபார்க்க துணைநிலை கவர்னர் எங்கள் தலைமை ஆசிரியர் அல்ல என்று டெல்லி துணைநிலை கவர்னரை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கினார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது தலைமையிலான அரசின் பணிகளில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

வினய் குமார் சக்சேனா

முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அண்மையில், டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு அனுப்பியது. ஆனால் துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அதனை திருப்பி அனுப்பியதாகவும், அதை மறு மதிப்பீடு செய்யுமாறு கெஜ்ரிவால் அரசாங்கத்திடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று, டெல்லி ஆட்சியில் செயல்பாட்டில் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தேசிய தலைநகரில் உள்ள துணைநிலை கவர்னர் அலுவலகத்திற்கு பேரணி நடத்தினர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை கவர்னர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்வது துரதிர்ஷ்டவசமானது. துணைநிலை கவர்னர் தனது தவறை அறிந்து, பின்லாந்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன். எங்கள் வீட்டுப்பாடங்களை சரிபார்க்க துணைநிலை கவர்னர் எங்கள் தலைமை ஆசிரியர் அல்ல. அவர் எங்கள் முன்மொழிவுகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும். அரசியல் காரணங்களுக்காக டெல்லி அரசாங்கத்தின் பணிகள் வேண்டுமென்றே தடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.