குஜராத் தேர்தலில் இருந்து ஒதுங்கினால்...பாஜக பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
aravind

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 

குஜராத் மாநில சட்டப் பேரவையின்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதாவது  வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.  குஜராத் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான்ன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். 

arvind kejriwal

இந்நிலையில், குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாக பாஜக பேரம் பேசியது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், தன்னிடம் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளியிட மறுத்த கெஜ்ரிவால், பாஜக நேரடியாக இதுபோன்று அணுகாது எனவும் விளக்கம் அளித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீதான கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு நிலவுகிறது. கெஜ்ரிவால் மீது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் பாஜக மீது கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.