தாய் இறந்த 3-வது மாதத்தில் 75 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்கள்

 
marriage

கர்நாடக மாநிலத்தில் 75 வயதில் தொழிலதிபர் ஒருவர் மனைவி இறந்த மூன்றாவது மாதத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். முன்னோர்கள் கூறிய பழமொழியை உறுதிப்படுத்தும் விதமாக 75 வயதான தொழில் அதிபர் டி கே சௌஹான் அவரது வாழ்க்கையில் சொர்க்கமாக கருதும் குடும்ப உறுப்பினர்களான நான்கு பெண் குழந்தைகள், மருமகன்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் ஒன்றிணைந்து அவரது திருமணத்தை முடிவு செய்து 75 வயது தாத்தாவிற்கு கோலாகலமாக இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நகரில் அரவிந்த் நகரில் வசித்து வரும் தொழில் அதிபரும் அரசியல் பிரமுகரும் ஆன டி கே சௌஹான் 2018 ஆம் ஆண்டு ஹூப்பள்ளி நகரின் மேயராக இருந்துள்ளார். தான் இருக்கும் பகுதியில் 3 முறை தொடர்ந்து கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு பல தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடித்து மருமகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மொத்தம் 27 நபர்கள் ஒரே வீட்டில் கூட்டு குடித்தனமாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சௌகான் அவரது மனைவி சாரதா பாய் வயது 63 திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

மனைவியின் மறைவுக்குப் பிறகு மிகவும் மனம் உடைந்து இருந்த சௌஹானுக்கு உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்தனர். சாரதா பாய் அவரது அக்கா அனுஸ்யா வயது 64 அவர்கள் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். சௌஹான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வெளியில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக நம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் அனுஸ்யாவை அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருமனதாக முடிவு எடுத்தனர். இதற்கு அனுஸ்யாவும் சம்மதம் தெரிவிக்க கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு கோலாகலமாக சௌஹான் அனுஸ்யா திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். கோலாகலமாக நடைபெற்ற தாத்தா பாட்டியின் திருமணத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களை மனநிறைவுடன் ஆசீர்வதித்து சென்றனர்.