ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கொரோனா நோயாளிகள்: மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை..

 
corona patient

ஆக்சிஜன் பற்றாக்குறையால்  கொரோனா நோயாளிகள்  எத்தனை பேர் இறந்தார்கள்  என்பதை மத்திய  அரசு கணக்கெடுக்க வேண்டும்  என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.  

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.  அதிலும் கொரோனா 2வது அலையின்போது பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகின. அந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காத சூழலும் நிலவி வந்தது.  இந்நிலையில் இதுகுறித்து   நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரான ராம் கோபால் யாதவ் தலைமையிலான  குழு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா 2-ம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்,   இதனை கவனிக்காமல் அரசு அலட்சியமுடன் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தது.  

நாடாளுமன்றம்

மேலும்,  சுகாதாரத்துறை வ்அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி தணிக்கை செய்து, கொரோனா உயிரிழப்புகளை ஆவணப்படுத்த வேண்டும் எனவும்,  அதுதான்  அரசின் பொறுப்புள்ள உணர்வை வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  ஒரு முன்னெச்சரிக்கையான கொள்கை உருவாக்கமும் செய்வதுடன், சுகாதார அவசரநிலை ஏற்படும் சூழலில் அதனை எதிர்கொள்ளவும் அது உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா பாதிக்கப்பட்டு அக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.  

கொரோனா மரணங்கள்

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என கோரி நீண்ட வரிசையில் நோயாளிகளின் குடும்பத்தினர் நின்ற பல்வேறு சம்பவங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அக்குழு,  பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும்,  ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்கிற சூழல் இருந்ததாகவும் கூறியுள்ளது. கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால்   20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அந்தந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளதாகவும்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ஆனாலும்,  சுகாதாரத்துறை , மாநிலங்களுடன்  இணைந்து  உயிரிழப்புள் குறித்து  தணிக்கை செய்ய வேண்டும் என்றும்,  நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில்  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.