ஒவ்வொரு தொகுதியிலும் 4 ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள், பெண்களுக்கு உதவி தொகை.. காங்கிரஸின் தேர்தல் அறி்க்கை

 
காங்கிரஸ்

இமாச்சல பிரதேச தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு தொகுதியிலும் 4 ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள், பெண்களுக்கு உதவி தொகை  வழங்குவோம் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் முன்னிலையில்  எதிர்வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் இமாச்சல பிரதேச தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம், இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலை வழங்கப்படும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம், ஒவ்வொரு தொகுதியிலும் 4 ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் நிதியுதவியாக ரூ.1,500 வழங்குவோம், ஸ்டார்ட்அப் நிதியாக ரூ.10 கோடி, பசு சாணத்தை கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்வோம் என்பது உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை  அளித்துள்ளது.

தானி ராம் ஷண்டில்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் தானி ராம் ஷண்டில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பா.ஜ.க. தவறி விட்டது. இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, இமாச்சல பிரதேச மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று தெரிவித்தார்.