நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை - காங்கிரஸ் கட்சியும் மறு சீராய்வு மனு தாக்கல்

 
supreme court

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் மறு சீராய்வு செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.   இந்த தீர்ப்பின் பலனை நளினி,  முருகன்,  சாந்தன், ஜெயக்குமார்,  ராபர்ட் பயர்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் கிடைக்க செய்தது. இதன் அடிப்படையில்  உச்சநீதிமன்றம் அவர்கள் ஆறு பேரையும் கடந்த 11ஆம் தேதி விடுவித்து நீதிபதிகள் பி.ஆர். காவாய்,  நாகரத்னா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அப்போது ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பது என முடிவெடுத்து தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதை  சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை என்று குறிப்பிட்டனர். மேலும்,   6 பேரின் வயது,  தண்டனை காலம்,  உடல் உபாதைகள்,  நன்னடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

nalini

இதனிடையே நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு  தாக்கல் செய்தது. அதில்,   வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்த்துக்கொண்ட  காரணத்தால் உரிய வாதங்களை முன்வைக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.   இதனால் ஆறு பேரும் விடுவிக்கப்பட்டதாக  கூறியுள்ள  மத்திய அரசு,   முக்கிய ஆதாரங்களை சமர்ப்பித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறது.  ஆகையால் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருந்தது.
 
இந்நிலையில்,  நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் மறு சீராய்வு செய்துள்ளது. இந்த மறு சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.