இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன்... காங்கிரஸ் மூத்த தலைவர்

 
தௌசீப் ஆலம்

சிராஜ், கலீல் அகமது போன்ற முஸ்லிம் வீரர்களுக்கு டி20 உலகப்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு அளிக்காததை குறிப்பிட்டு, இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன் என்று பீகார் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், அக்ஸர் படேல், சஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிராஜ்

மேலும்,   ஸ்டேண்ட் பை வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர் மற்றும் ரவி பிஷ்னோய் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், சிராஜ் மற்றும் கலீல் அமகது போன்ற முஸ்லிம் வீரர்கள் சேர்க்கபடாதது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் காங்கிரஸை சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

கலீல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தௌசீப் ஆலம் சமூக வலைதளத்தில், கிரிக்கெட் உலகில் இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன். டி20 உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்வு செய்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, சமி, சிராஜ், கலீல் அகமது போன்ற வீரர்களை அமர வைத்தது ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.