உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. சாதிவெறி சந்தேகம் இல்லை.. உதித் ராஜ் சர்ச்சை கருத்து

 
உச்ச நீதி மன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து உச்ச நீதிமன்றம் உயர்சாதி மனப்பான்மை கொண்டது என்று காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு  வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103வது அரசியல் அமைப்பு திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

உதித் ராஜ்

உதித் ராஜ் டிவிட்டரில், நான் பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் இந்திரா சஹானியின் தீர்ப்புக்கு பிறகு அது என்னவாக இருந்தது, இன்று அதற்கு மாறாக யு டர்ன் எடுத்தது என்ற உச்ச நீதிமன்றத்தின் உயர்சாதி மனப்பான்மை கண்டு வேதனை அடைகிறேன். எஸ்.சி., எஸ்.டி.  மற்றும் ஓ.பி.சி.-க்கு இடஒதுக்கீடு விஷயங்கள் வரும்போதெல்லாம்  உச்ச நீதிமன்றம் 50 சதவீத வரம்பை நினைவூட்டுகிறது என பதிவு செய்து இருந்தார்.

கவுரவ் பாட்டியா

உதித் ராஜின் கருத்துக்கு பா.ஜ.க. அவரை கடுமையாக சாடியது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் நல்லது எதுவும் இல்லாத கட்சி. அவரது (உதித் ராஜ்) வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது போன்ற கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும். அவரது வார்த்தைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.