நாட்டில் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
rahul

நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுவதாகவும், நாட்டில் தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடைபெறுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு,  சமையல் எரிவாயு விலை உயர்வு , வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மற்றும்  அமலாக்க துறை மூலமாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை   பாஜக தலைமையிலான அரசு  மேற்கொண்டு வருவதைக் கண்டித்து,  இன்று ( ஆகஸ்ட் 5)  நாடு தழுவிய  போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

rahul

இதனிடையே முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாட்டில் இருக்கக்கூடிய 2,3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.நாடாளுமன்றத்தில் மக்களுக்கான எந்த விவாதத்தையும் நடத்துவதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை எல்லாம் நம் கண் எதிரே அடித்து நொறுக்கப்படுகிறது.நாட்டில் தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது. மக்களின் பிரச்னைகளை திசை திரும்புவதே மோடி அரசு நோக்கமாக உள்ளது. வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும் நான் எந்த அளவிற்கு மோடி அரசை எதிர்க்கிறனோ, அந்த அளவிற்கு தாக்கப்படுவேன். உண்மையில் நான் இப்படி தாக்கப்படும் போது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். இவ்வாறு கூறினார்.