ஜார்க்கண்ட் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..

 
ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு : முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..


ஜார்க்கண்ட் சட்டபேரவையில் இன்று நடைபெற்ற  நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றுள்ளார்.   

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார்.  தனது  முதல்வர் பதவியை முறைகேடாக  பயன்படுத்தி  சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக  பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.   இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  மேலும்  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்திலும்  பா.ஜ.க.புகார் அளித்தது.  

ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு : முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  தேர்தல் ஆணையம், அவரை தகுதி நீக்கம் செய்ய  ஜார்க்கண்ட்  மாநில  ஆளுநருக்கு  கடந்த மாதம் 25ம் தேதி  பரிந்துரை செய்தது. இதனையடுத்து  ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது முதலமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டது.   ஆனால் ஆளுநர் ரமேஷ் பைசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதற்கிடையே எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுத்து  ஆட்சியைக் கவிழ்க்க  பாஜக திட்டமிட்டுள்ளதாக ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார்.  இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் கட்சி மாறாமல் இருக்க சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள  ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

   முதல்வர் ஹேமந்த் சோரன்

 இந்த நிலையில் இன்று சட்டபேரவையில்   (செப்டம்பர் 5-ம் தேதி)  நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியிருந்தார்.   இதனையொட்டி ராய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த 30 எம்.எல்.ஏக்களும் தனி விமானம் மூலம் நேற்று மாலை ராஞ்சி அழைத்து வரப்பட்டனர்.  தொடர்ந்து இன்று காலை  ஜார்க்காண்ட் சட்டபேரவை  சிறப்பு கூட்டம் கூடியதும் முதல்வர்  ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அப்போது தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில்  நம்பிக்கை  வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பாஜக வெளிநடப்பு செய்தது. மேலும்   தீர்மானத்திற்கு ஆதரவாக 48 பேர் வாக்களித்த நிலையில்,  ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.