குரங்கம்மை பரவல் குறித்து மத்திய அரசுக்கு வழிகாட்ட குழு அமைப்பு

 
monkeypox

குரங்கம்மை பரவல் குறித்து மத்திய அரசுக்கு வழிகாட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்துள்ளார்.   கேரளாவில் 2 பேருக்கும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவரும் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், குரங்கம்மை பரவல் குறித்து மத்திய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் குழுவில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.