இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி...

பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கருப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதில் கருப்பை வாயில் ஏற்படும் கேன்சர் தொற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியுமாம். அதுமட்டுமின்றி கருப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க, முன்கூட்டியே தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவரை இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இந்தியாவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த தடுப்பூசியை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 2018-ம் ஆண்டு இந்தியாவின் 12 இடங்களில் தடுப்பூசிக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க முழு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும், இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.