குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப். 30ம் தேதி வரை அனுமதி - மத்திய அரசு

 
kuruna rice

குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் என கூறப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து அரசாணை வெளியிட்டது.  அதன்படி சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது.

Rice Export

இதனிடையே, கடந்த 09ம் தேதி குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்தது. இந்நிலையில், குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.  சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.