புதிய அரசு குடியிருப்பை பெறும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பீகாரின் ஏழை எம்.எல்.ஏ.

 
ராம்விரிக்ஷ் சதா

பீகாரில் ஏழ்மையான எம்.எல்.ஏ. என்று கூறப்படும் ராம்விரிக்ஷ் சதா, புதிதாக கட்டப்பட்ட  அரசு வீட்டின் சாவியை முதல்வர் நிதிஷ் குமாரிடம் இருந்து பெற்றதும் கண்ணீர் விட்டு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் சுகாரியா மாவட்டத்தில் அலாலி சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ராம்விரிக்ஷ் சதா. இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக ஆகியுள்ளார். பீகாரில் ஏழ்மையான எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதா என்று கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலன்போது ராம்விரிக்ஷ் சதா தாக்கல் செய்து இருந்த தேர்தல் பிராணப் பத்திரத்தில், தனது மொத்த அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.70 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், ரூ.25 ஆயிரம் அல்லது தனது நிகர சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பணமாக இருந்தது என தெரிவித்து இருந்தார்.

வீட்டு சாவியை முதல்வர் நிதிஷ் குமாரிடம் பெறும் எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதா

முதல் முறை எம்.எல்.ஏ.வான ராம்விரிக்ஷ் சதா தற்போது 2004ம் ஆண்டு ககாரியாவின் ரன் கிராமத்தில் இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட 2 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். 5 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அந்த குடியிருப்பை ராம்விரிக்ஷ் சதா பகிர்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், பீகார் அரசின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தங்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.எல்.ஏ.க்கள்) வீடுகள் ஒதுக்கப்பட்ட எட்டு எம்.எல்.ஏ.க்களில் ராம்விரிக்ஷ் சதாவும் ஒருவர். கடந்த சில தினங்களுக்கு முன் பாட்னாவில் உள்ள மூன்று மாடி அரசு குடியிருப்பின் சாவியை  எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதாவிடம் முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார்.

அரசு கொடுத்த வீட்டின் முன் குடும்பத்தினருடன் எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதா

முதல்வர் நிதிஷ் குமாரிடம் வீட்டின் சாவியை எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதா வாங்கும்போது மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏ. ராம்விரிக்ஷ் சதா இது தொடர்பாக கூறியதாவது: பீகாரில் நான்தான் ஏழை எம்.எல்.ஏ. ஒரு ஏழைக்கு ஏதாவது கிடைத்தால் அது தீபாவளியை போன்றது. முதல்வர் (நிதிஷ் குமார்) வீட்டின் சாவியை என்னிடம் கொடுத்தார். என் வாழ்நாளில் நான் கனவில் கூட நினைக்காத வீடு. நான் முசாஹர் சமூகத்தில் இருந்து வந்தவன். இது இந்தியாவில் உள்ள பட்டியல் சாதிகளில் மிகவும் ஏழ்மையானது என்று கூறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.