வந்தே பாரத் ரயில் மோடி அல்லது மம்தாவின் சொத்து அல்ல, பொதுச் சொத்து.. பிரபல பெங்காலி நடிகர் தேவ் அருமையான பேச்சு

 
மோடி, மம்தா பானர்ஜி

வந்தே பாரத் ரயில் மோடி அல்லது மம்தாவின் சொத்து அல்ல அது பொதுச் சொத்து, இந்த ரயில் தங்களுக்கானது என்பதையும், அதில் தங்கள்  குடும்பத்தினர் இந்த ரயில்களில் பயணிப்பார்கள் என்பதையும் கல்லெறிபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பெங்காலி நடிகர் தேவ் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் தொடர்ந்து 2 தினங்கள் வந்தே பாரத் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்ததாக கூறப்பட்டது இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியனரும், பா.ஜ.க.வினரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ஆனால் அந்த ரயில் பீகார் வழியாக செல்லும் போது தாக்கப்பட்டது தெரியவந்தது. கடந்த 3ம் தேதியன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியது தொடர்பாக பீகார் காவல் துறை 3 சிறார்களை கைது செய்தது.

தேவ்

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் மீதான தாக்குதலை நடத்த ஒரே வழி, குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், நடிகருமான தேவ் கருத்து தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தனது தொகுதியான கட்டலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தேவ் பேசுகையில் கூறியதாவது:  குழந்தைகள் கல்வி கற்க வேண்டும். பொதுச் சொத்துக்கள் மீது கல் வீச்சு போன்ற பிரச்சினைகளை நிறுத்த ஒரே வழி கல்விதான். 

வந்தே பாரத் ரெயில்

இனிமேல், நம் குழந்தைகளுக்கு பொதுச் சொத்தை சொந்த சொத்தாக மதிக்கக் கற்றுக் கொடுத்தால், அதை சேதப்படுத்த மாட்டார்கள். பொதுச் சொத்து என்பது மக்களின் நலனுக்கானது. அதன் முக்கியத்துவத்தை  அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது (வந்தே பாரத் ரயில்) பொதுச் சொத்து. இது மோடியின் சொத்தும் அல்ல, தீதியின் (மம்தா பானர்ஜி) சொத்தும் அல்ல. அவர்கள் இந்த ரயிலில் பயணிக்க மாட்டார்கள். இந்த ரயில் தங்களுக்கானது என்பதையும், தங்களின் குடும்பத்தினர் இந்த ரயில்களில் பயணிப்பார்கள் என்பதையும் கல்லெறிபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.