கணவருடன் தகராறு- 65 கி.மீ நடந்து சென்ற கர்ப்பிணிக்கு சாலையிலேயே குழந்தை பிறந்தது

 
baby

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர். நகரை சேர்ந்த கொத்துரு வர்ஷினி தனது கணவருடன் கூலி பணி நிமித்தமாக திருப்பதிக்கு வந்தார். கருவுற்றிருக்கும் வர்ஷினிக்கு அவரது கணவர் மது அருந்தி தினந்தோறும்  சண்டை ஏற்பட்டு அடித்து வந்ததால் வர்ஷினி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

கணவன் மீது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் கையில் பணம் இல்லை. இருப்பினும் மீண்டும் கணவரிடம் செல்ல சுயமரியாதை தடுத்ததால் தன் கணவனிடம் திரும்ப செல்லவில்லை.  இதனால் கர்ப்பமாக இருந்த வர்ஷினி எங்கு செல்வது தெரியாமல் நடக்க ஆரம்பித்தார்.  திருப்பதியில் துவங்கிய நடைபயணம் சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுபேட்டையை அடைந்தது. நீண்ட நேரம் நடந்ததால் முற்றிலும் சோர்வாக இருந்த வர்ஷினி நாயுடுபேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தவுடன் வர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சாலையில் விழுந்த துடித்து கொண்டுருந்தபோது இதை கவனித்த வாலிபர் ஒருவர் மனித நேயத்தை காட்டினார். 

உடனடியாக வர்ஷினியிடம் சென்று பிரசவ வலியால் அவதிப்படுவதை அறிந்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தாலும் நீண்ட நேரமாக பிரசவ வலி இருந்ததால் பிரசவத்திற்கு நேரம் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சாலையிலேயே வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கிரண்குமார் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் அந்த பெண்ணை குழந்தை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டனர். இதில் சாலையிலேயே  பெண் குழந்தை பிறந்த நிலையில் வர்ஷினியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள், வீட்டில் இருந்து புடவைகள் மற்றும் குழந்தைக்கு துணிகளை கொண்டு வந்து தாய் மற்றும் குழந்தைக்கு கொடுத்தனர். 

குழந்தை எடை குறைவாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு தாய் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை வெளியிட மறுத்ததையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் திஷா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  அப்போது போலீசாரிடன் மதுகுடித்து கணவர் அடித்ததால் விசாகப்பட்டினத்தில் உள்ள தாய் விட்டிற்கு நடந்த செல்ல இருந்ததாக தெரிவித்தார். குழந்தைக்கு சிகிச்சைக்கு பின்னர் தாய் மற்றும் குழந்தையை  விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமத்திற்கு இருவரையும் அனுப்ப இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.