பிரிவினையின்போது மட்டுமே இந்தியா பிரிந்தது, காங்கிரஸூக்கு நன்றி.. மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
பா.ஜ.க.

நாடு பிரிந்து கிடக்கிறது என்று மணி சங்கர் அய்யரின் குற்றச்சாட்டுக்கு பிரிவினையின்போது மட்டுமே இந்தியா பிரிந்தது, இந்திய தேசிய காங்கிரஸூக்கு நன்றி என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதலில் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலில் கவனம் செலுத்துவோம். இந்த முழு நேரத்திலும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரும் என்று நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் கடும் சவாலாக இருக்க முடியும். ராகுல் காந்தி கூறியது போல் இந்த நடைப்பயணத்தின் நோக்கம் தேசத்தை ஒன்றிணைப்பதாகும்.  நாடு பிரிந்து  இருப்பதால்  தான் அதை ஒன்றிணைக்க வேண்டிய தேவை உள்ளது. 

மணி சங்கர் அய்யர்

மதம், மொழி, ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில்  இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பது சங் பரிவார (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.) மக்கள்தான். இந்த யாத்திரை (ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) அதற்கு எதிரானது. நாட்டை உடைக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாட்டை பிரிக்கிறது என்ற மணி சங்கர் அய்யரின் குற்றச்சாட்டு்ககு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. 

காங்கிரஸ்

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா டிவிட்டரில், ராஜஸ்தான் முதல் கர்நாடகா வரை காங்கிரஸ பிரிந்து கிடக்கிறது. இப்போது மீண்டும் சர்தார் படேலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மணிசங்கர் அய்யர் இந்தியா பிரிந்து கிடக்கிறது என்கிறார். அதனால் சர்தார் படேலால் இந்தியா ஒருங்கிணைக்க முடியவில்லை. அதை ராகுல் காந்தி செய்வாரா?. பிரிவினையின்போது (1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை) மட்டுமே இந்தியா உடைந்தது இந்திய தேசிய காங்கிரஸூக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.