விரைவில் குஜராத்தில் பொது சிவில் சட்டம்... ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த பா.ஜ.க. அரசு

 
பொது சிவில் சட்டம்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் குழு ஒன்றை அம்மாநில பா.ஜ.க. அரசு அமைத்துள்ளது.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ..க. தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க.வுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை நேற்று அமைத்துள்ளது. இந்த குழு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று அல்லது நான்கு பேர் கொண்டதாக இருக்கும் என தகவல்.

அமித் ஷா, மோடி

இது தொடா்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழுவை அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மட்டுமே இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.