இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்... பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி

 
பா.ஜ.க.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா எதிர்வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினால் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளது. 

பொது சிவில் சட்டம்

மேலும், ஐந்தாண்டுகளில் 8 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம், மாநிலத்தின் முக்கிய பயிரான ஆப்பிள்களின் பேக்கேஜிங்கின் மீதான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.  அரசு வேலைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்கள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் ஐந்து புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்துள்ளது.

இமாச்சல பிரதேச தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர்கள்

பா.ஜ.க. வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, அரசு ஒரு குழுவை அமைக்கும்.  காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தொலைநோக்கு பார்வை மற்றும் வெயிட்டும் இல்லை என்று தெரிவித்தார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச  முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.