சித்தராமையா போட்டியிட பாகிஸ்தான் பாதுகாப்பான இடம், அவர் அந்நாட்டிடம் பேச வேண்டும்.. பா.ஜ.க. தலைவர்கள் கிண்டல்

 
ஜக்கேஷ்

சித்தராமையா போட்டியிட பாகிஸ்தான் பாதுகாப்பான இடம் என்றும், பாகிஸ்தானிடம் அவர் பேச வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை பா.ஜ.க. தலைவர்கள் கிண்டல் செய்தனர்.

கர்நாடகாவில் இந்த ஆண்டு மே மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், கோலார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். 

சித்தராமையா

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், கோலார் தொகுதியில் எனக்கு எதிராக மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரம் செய்தாலும் நான் வெற்றி பெறுவேன் என்று சித்தராமையாக உறுதிபட தெரிவித்தார். கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட விருப்பம் தெரிவித்தது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.டி. ரவியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சி.டி. ரவி பதிலளிக்கையில், சித்தராமையா போட்டியிட பாகிஸ்தான் பாதுகாப்பான இடமாக இருக்கும் ஏனென்றால் அது அவரது (முஸ்லிம் ஆதரவு) மனநிலைக்கு ஏற்றது என கிண்டல் செய்து இருந்தார். இந்நிலையில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. ஜக்கேஷ், சித்தராமையாவை கிண்டல் செய்துள்ளார்.

சி.டி.ரவி

பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. ஜக்கேஷ் கூறியதாவது: பாகிஸ்தான் நமக்கு முள்ளாக இருக்கிறது. முன்பு 24 மணி நேரமும் தொந்தரவு செய்து வெடிகுண்டு வீசினர். நான் சித்தராமையாவிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இங்கு வந்து பேசுவதற்கு பதிலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்று அவர்களை சமாதானப்படுத்துங்கள். ஜி20க்கு சென்று அவர்களை சமாதானப்படுத்துங்கள். உங்களால் முடியுமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.