இந்துக்களை காக்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து என்ன பயன்?.. பதவியை ராஜினாமா செய்வேன்.. கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 
ரேணுகாச்சார்யா

இந்து தொண்டர்களை காக்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து என்ன பயன்?, பா.ஜ.க. மாவட்ட செயலாளரை கொலை செய்தவர்கள் மீது  மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.பி. ரேணுகாச்சார்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தவர்  பிரவீன் நெட்டாரு. இவர் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரவீன் நெட்டாரு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கோடாரி, வாளால் பிரவீன் நெட்டாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரவீன் நெட்டாரின் அலறல் சத்தம் கேட்டு, வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவர் உயிர் இழந்தார். இதனால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பிரவீன் நெட்டாரை கொலை செய்தவர்கள் மீது  மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.பி. ரேணுகாச்சார்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரவீன் நெட்டாரு

இது தொடாபாக ரேணுகாச்சார்யா கூறியதாவது: இந்து ஆர்வலர்களின் கொலைக்கு காரணமாக குற்றவாளிகள் மீது எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். யோகி ஆதித்யநாத்தின் அரசை போன்று எங்கள் (கர்நாடக பா.ஜ.க.) அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எங்கள் அரசாங்கமும் அமைப்பும் கவர்ச்சியாக இருக்க முடியும். மாநிலத்தில் இந்து ஆர்வலர்களின் கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நமது இந்து தொண்டர்களை காக்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து என்ன பயன்?. ஒவ்வொரு முறையும் ஒரு இந்து ஆர்வலர் கொல்லப்படும்போது சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்பட்டு அஞ்சலி செலுத்துவது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவது, குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவிப்பது மற்றும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவைகளால் எந்த பயனும் இல்லை. 

யோகி

இந்து ஆர்வலர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மாநில அரசு விரும்பினால், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். எனவே எங்கள் அரசு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எனது தொகுதி தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களுடன் கலந்து பேசி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது பற்றி யோசித்து வருகிறேன். மக்கள் விரும்புவது எங்கள் பேச்சுக்கள் அல்லது அறிக்கைகளை அல்ல. ஆனால் நாங்கள் எடுக்கும் தீர்க்கமான செயல்ளை. தவறானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நான் இந்த அரசாங்கத்தில் தொடர்வேன் என்பதை மீண்டும் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.