காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் சோனியா காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் - பாஜக

 
BJP

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுள்ளார். கட்சி கட்டமைப்பை முழுமையாக சீரமைக்குமாறு கடந்த 2020 ஆம் ஆண்டு அதிருப்தி  தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி 23 குழு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

sonia gandhi

ஆனால் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரை காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது . இம்மாத 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் என்றும் மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் என்றும் அக்டோபர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் என்றும் 19 ஆம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார். தங்களது குடுப்ப உறுப்பினர்கள் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரும்பாததால் தான் போட்டியிடுவதாகவும் அசோக் கெலாட் தெரிவித்து இருந்தார். 

congress

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:  காந்தி குடும்பத்திடம் ரிமோட் கண்ட்ரோல் இருக்கும்பட்சத்தில் இந்த போலித் தேர்தல் எதற்கு? காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், அடுத்த தலைவராக யார் வந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என சமீபத்தில் கூறியதாக பூனவல்லா குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.  மன்மோகன் சிங்கை சோனியா காந்தி ரிமோட் மூலம் கட்டுப்படுத்தியதுபோல் புதிய காங்கிரஸ் தலைவரையும் கட்டுப்படுத்துவார். இந்த அறிக்கைகள், விரைவில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு வெறும் கண்துடைப்புக்காக என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு பூனவல்லா தெரிவித்துள்ளார்.