நீங்கள் பாரத மாதாவின் உண்மையான குழந்தைகள் என்பதை நிரூபிக்க வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க.. ஹிமந்தா பிஸ்வா சர்மா

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

நீங்கள் பாரத மாதாவின் உண்மையான குழந்தைகள் என்பதை நிரூபிக்க வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்க என்று அசாம் மக்களிடம் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு அசாமில் உள்ள உடல்குரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் கூறியதாவது:  இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை, உங்கள் வீடுகளில் மூவர்ண  கொடியை (தேசியக் கொடி) ஏற்றவும். நீங்கள் இந்திய குடிமக்கள் என்று சொல்ல என்.ஆர்.சி.க்கு விண்ணப்பிப்பது போதாது. நீங்கள் பாரத மாதாவின் உண்மையான குழந்தைகள் என்பதற்கு மூவர்ணக் கொடியை ஏந்தி சான்று கொடுக்க வேண்டும் , இல்லையா?.

தேசியக் கொடி

மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மூவர்ணக் கொடியை தலா ரூ.18க்கு அரசு வழங்கும். நாம் அதை இலவசமாக வாங்க மாட்டோம். ஏனென்றால் நமக்கு நாட்டின் மீது கடமை உள்ளது. மற்றவர்கள் கொடுத்த கொடியை நாம் எடுக்க மாட்டோம். அதை நாமே வாங்குவோம். இந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தேசிய கொடிகளை மக்கள் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

75வது சுதந்திர தினம்

கடந்த சில தினங்களுக்கு முன் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், மாநிலம் முழுவதும் 80 லட்சம் கொடிகளை ஏற்றுவதை எனது அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் கொடிகளை வழங்க விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். விழிப்புணர்வுக்காக  தீம் பாடல்கள், ஊடக விளம்பரம் போன்ற பல நடவடிக்கைகளை எடுப்போம் என பதிவு செய்து இருந்தார்.